தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூகநீதிக்கு உழைத்திட்ட பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படுகிறது.

Advertisment

இவ்விருதுகளை பெறுவோர் தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

Advertisment

 அந்தவகையில் 2026-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்; தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழி; அண்ணல் அம்பேத்கர் விருது விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்; பேரறிஞர் அண்ணா விருது   அமைச்சர் துரைமுருகன்; பெருந்தலைவர் காமராசர் விருது  எஸ்.எம்.இதயத்துல்லா ; மகாகவி பாரதியார் விருது  கவிஞர் நெல்லை ஜெயந்தா; பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதி; தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் முனைவர் செல்லப்பா; முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பி ஆகியோருக்கு தமிழக முதல்வர் விருதுகளை வழங்கினார்.

அய்யன் திருவள்ளுவர் விருது

தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் முதல் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. 

Advertisment

அந்த வகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

2026-ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் விருது பெற்றவர்:

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பாவேந்தர் பாரதிதாசன் விருது
திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றவர்:

கவிஞர் யுகபாரதி

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது.

2025-ஆம் ஆண்டு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றவர்:
 முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு

மகாகவி பாரதியார் விருது

தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.

2025 -ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது பெற்றவர்:
கவிஞர் நெல்லை ஜெயந்தா

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
தமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000-ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு முத்தமிழ்க் காவலர் 

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்:
முனைவர் செல்லப்பா

தந்தை பெரியார் விருது

தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கை களை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத்தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதைபெற்றவர்:

வழக்கறிஞர் அருள்மொழி

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர். 

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967-1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

2025-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்:
அமைச்சர் துரைமுருகன்

அண்ணல் அம்பேத்கர் விருது

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூகநீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

2025 -ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்:

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்

பெருந்தலைவர் காமராஜர் விருது

தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது 

2025 -ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர்விருது பெற்றோர்:

எஸ்.எம்.இதயத்துல்லா 

-----------------------
இலக்கிய மாமணி விருதுகள்

awards1

பன்னூறு ஆண்டுகளாக வற்றாதபடைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றும் தமிழ்த் தாயின் அறிஞர் பெருமக்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய 3 பிரிவுகளில் ‘இலக்கிய மாமணி’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 

கலைஞரின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும்மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டு, மரபுத்தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத்தமிழ் ஆகிய வகைப்பாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கு மரபுத் தமிழ் பிரிவில் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம், ஆய்வுத் தமிழ் பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எழுத்தாளர் சி.மகேந்திரன், படைப்புத் தமிழ் பிரிவில் இரா.நரேந்திர குமார் ஆகிய 3 பேருக்கு ‘இலக்கிய மாமணி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்பாட்டில் ”உலகின் பல்வேறு நாடுகளில் செம்மாந்த இலக்கிய உரைகளை நிகழ்த்தி வருபவரும் தினமணி நாளிதழில் ஞாயிறு தோறும் கம்பன் தமிழமுதம் என்னும் தலைப்பில் ஆழ்ந்த கட்டுரைகள் எழுதியதோடு தொடர்ந்துபல்வேறு இதழ்களில் எழுதி வருபவரும் தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு மேடைப் பேச்சாற்றலுக்கான நல்வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்து வருபவரும் சென்னை, கம்பன் கழகத்தில் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவரும் மாபெரும் தமிழறிஞர்களின் வழிகாட்டுதல்களோடு இலக்கியப்பணியாற்றி வரும் இலக்கியச் சுடர் த. இராமலிங்கத்துக்கு மரபுத் தமிழ் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது.

ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் இலக்கியப் பேராசான் ஜீவானந்தத்தால் 1959-இல் தொடங்கப்பட்ட தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவரும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், சமூக விழிப்பு கொண்ட எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருபவரும், சீர்திருத்த மேடைப் பேச்சாளராக அணி செய்பவரும், “வீழ்வேன் என்று நினைத்தாயோ?, “தீக்குள் விரலை வைத்தேன்”, தமிழ்நாடு பிறந்தது (தொகுப்பு)” உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவருமான எழுத்தாளர் சி. மகேந்திரனுக்கு ஆய்வுத் தமிழ் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது.

படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆசிரியராக இருந்த ‘நம்நாடு’ வார ஏட்டில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதியதோடு, வைகறை முரசு இதழில் தொடர்ந்து எழுதியவரும் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வள்ளுவம் தொடர்பான தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி வருபவரும், திராவிடச் சிந்தனையில் ஆழ்ந்து பல படைப்பு நூல்களை வெளியிட்டதோடு, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அறிஞர்களை அழைத்து இராசபாளையத்தில் அருமையான இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதை தொடர் பணியாக செய்யும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. நரேந்திரகுமாருக்கு படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது.

சென்னையில் திருவள்ளுவர் தினத்தன்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இம்மூவருக்கும் இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார். மேலும் அனைத்து விருதாளர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் விருதுத் தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் கவுரவித்தார்.